Saturday, April 28, 2018

பட்டுப் பாவாடை


தையல்காரன் தைத்திடாத 
பட்டுப் பாவாடை - இது
கையால் வண்ணம் தீட்டிடாத
பட்டுப் பாவாடை 


பச்சை, நீலம், மஞ்சள் போன்ற
பலவித வர்ணத்தால் - இது 
இச்சை கொண்டு இயற்கை செய்த 
பட்டுப் பாவாடை 


கோடுகள் புள்ளிகள் என்றே கோலம் 
காட்டும் பாவாடை - இது 
கோடிப் பொன்னைக் கொடுத்தால் கூடக் 
கிடைக்காப் பாவாடை


பட்டு, மாலா, நீலா, லீலா 
பத்மா அனைவருமே 
தொட்டுத் தொட்டுப் பார்க்கத் துடிக்கும் 
பட்டுப் பாவாடை


பட்டாம்பூச்சி போட்டுக் கொண்ட 
பட்டுப் பாவாடை 
பாரில் இதுபோல் கிடைத்திடுமோ சொல் 
பட்டுப் பாவாடை

Friday, April 27, 2018

அ ஆ பாடம் கற்றிடலாம்



அறிவும் ஆற்றலும்               அ   ஆ  வாம்

இன்பமும் ஈகையும்              இ   ஈ   யாம் 

உண்மையும் ஊக்கமும்           உ   ஊ  வாம்

எளிமையும் ஏற்றமும்             எ   ஏ   யாம்

ஐக்கியமும் ஒழுக்கமும்               ஐ   ஒ  வாம்

ஓங்காரமும் ஒளவையும்          ஓ   ஒள  வாம்

அ  ஆ  பாடம் கற்றிடலாம் - நம்
ஆசான் அவரைப் போற்றிடலாம்

கண்கள்

சின்னஞ் சிறிய குருவிக்கு
கடுகு போன்ற கண்களாம்
வளலயில் பதுங்கும் நண்டுக்கு
குன்றிமணிக் கண்களாம்

குட்டிக் குட்டிப் பூனைக்கு
கோலி குண்டுக் கண்களாம் 
வெள்ளை வெள்ளை முயலுக்குப்
பளிங்கு போன்ற கண்களாம்

அறிவில் சிறந்த ஆந்தைக்கு
முட்டை போன்ற கண்களாம் 
ஆனால் அழகு மயிலுக்கோ
தோகை முழுதும் கண்களாம்






Tuesday, April 24, 2018

மின்னுது மினுக்குது நட்சத்திரம்



கார்த்திகைத் தீபங்கள் போல வானில்            
மின்னுது மினுக்குது நட்சத்திரம்                     
தங்கைப்  பாப்பா கண்களைப் போல
மின்னுது வானில் நட்சத்திரம்

மின்மினிப் பூச்சிகள் நிலாவைக் காண
வானம் சென்று வழி தவறி
இங்கும் அங்கும் அலைவது போல
இருளில் ஒளி விடும் நட்சத்திரம்

கூடை முல்லைப் பூக்களை எடுத்து
குளிரும் நிலவின் மேல் எவரோ
கொட்டி விட்டது போல வானில்
மின்னுது மினுக்குது நட்சத்திரம்

சிட்டுக்குருவி

                                                        Photo by Vladyslav Dukhin from Pexels



சின்னச் சின்னச் சிட்டுக்குருவி
சின்னப் பையன் கிட்ட வா
தட்டு நிறைய நெல்லைத் தருவேன்
தட்டிடாமல் கிட்ட வா

கடுகு போலக் கண்களாலே
பயந்து பயந்து பார்ப்பதேன்?
வானில் பறந்து செல்கிறாயே
தரையில் தத்திச் செல்வதேன்?

சின்னஞ் சிறிய அலகினாலே
நெல்லைக் கொறித்து அரிசியின்
மணியை மட்டும் பிரித்து எடுக்கப்
படித்ததெந்தப் பள்ளியில்?

சுறுசுறுப்பாய்ப் பறந்து திரியும்
சிட்டுக் குருவி உன்னைப்போல்
துறுதுறுப்பாய் நானும் வாழ்வேன்
உறுதி இது உறுதியே

Friday, April 20, 2018

துப்பறியும் எறும்புகள்

                          Photo by Poranimm Athithawatthee from Pexels

சாரை சாரையாக எறும்பு
ஊர்ந்து ஊர்ந்து செல்லுது
சத்தம் இல்லை சுவரின் மேலே
வரிசையாகச் செல்லுது

சுறுசுறுப்பாய் எறும்புகளும்
போவதெங்கே புரியலே
ஏணி மேலே ஏறிப் பார்த்தேன்
கண்ட காட்சி சொல்லவா?

பண்டிகைக்கு அம்மா செய்த
பலகாரங்கள் யாவையும்
பத்திரமாய் வைத்த பெரிய
பாத்திரம்தான் இருந்தது

உச்சி மீது ஒளித்து வைத்த
இனிப்பை எடுத்து நானுமே
அச்சம் இன்றி ஆவலோடு
ஆசை தீரத் தின்னுவேன்

இனிப்பிருக்கும் இடத்தைக் கண்டு
பிடித்த எறும்பை மறப்பேனோ?
இல்லை இல்லை, அவர்களுடன்
பங்கு போட்டுக் கொள்ளுவேன்