Saturday, August 4, 2018

குறும்பு நிறையப் பண்ணுங்கள்



குட்டிக் குரங்கை அன்புடன்
கட்டிக் கொண்டு நெஞ்சிலே
கிளைக்குக் கிளை தாவிடும்  
குரங்கைப் பாரு மரத்திலே

வாலைக் கிளையில் சுற்றியே
தலை கீழாகத் தொங்கியே                    
காலை மாலை வேலையில்
தேகப் பயிற்சி செய்யுதே

இரண்டு கையை மூடியே 
ஒன்றில் இனிப்பை ஒளித்திடின்
இனிப்பு இருக்கும் கையையே
கண்டு பிடித்துச் சிரிக்குதே

குறும்பு மிகவும் செய்திடும்
குரங்கைப் பார்க்க வாருங்கள்
குழந்தைகளே நீங்களும்
குறும்பு நிறையப் பண்ணுங்கள்


Monday, July 30, 2018

வாழைப்பழம் வாழைப்பழம்


வாழைப்பழம் வாழைப்பழம்
குலைகுலையாய்த் தொங்கும் பழம்
இனிக்கும் நல்ல வாழைப்பழம்
எல்லோரும் வாங்கும் பழம்

விலையில் மிகவும் குறைந்த பழம்
வருடம் முழுதும் கிடைக்கும் பழம்               
பண்டிகையில், பூஜையிலே
பந்தியிலே முந்தும் பழம்

வாழைப்பழம் வாங்கிடலாம்
வாயில் போட்டு ருசித்திடலாம்
தோலை மட்டும் மறக்காமல்
தொட்டியிலே போட்டிடலாம் 

கை வீசம்மா


கை வீசம்மா கைவீசு
காலையில் எழுந்ததும் கைவீசு
நூலகம் போவோம் கைவீசு
புத்தகம் படிப்போம் கைவீசு

அறிவை வளர்ப்போம் கைவீசு
ஆற்றல் பெருகிடும் கைவீசு
பற்பல கற்பனை செய்தே நாம்
பாடல்கள் எழுதலாம் கைவீசு

Saturday, July 7, 2018

கங்காரு


கங்காரு ஆண்ட்டி காலை நேரம்
எங்கே போறீங்க?
கடைத் தெருவில் பொருட்கள் வாங்க
நானும் போறேங்க

கடையோ இருக்கு மிகவும் தொலைவில்
எப்படிப் போவீங்க?
தடையே இல்லை,  தாவித் தாவி
நொடியில் போவேங்க

வீட்டில் இன்று என்ன விசேஷம்
என்னிடம் சொல்லுங்க
செல்லப் பிள்ளை பிறந்த நாளாம்
சீக்கிரம் போகனுங்க

பையில்லாமல் பொருட்களை எப்படி
வாங்கி வருவீங்க? - என்
தொப்பைப் பையில் போட்டுக்கிட்டுத்          
துள்ளி வருவேங்க

Thursday, June 28, 2018

இரண்டு கற்களின் கதை


கற்கள் இரண்டு மலையின் அடியில்
எடுப்பார் இன்றிக் கிடந்தது
சிற்பக் கலையில் கற்றுத் தேர்ந்த
சிற்பி கண்ணில் பட்டது

கற்கள் இவற்றில் கடவுள் சிலைகள்
தட்டித் தட்டிச் செய்யுவேன்.
மன்னரிடம் சென்று நானும்
பொன்னும் பொருளும் வெல்லுவேன்

என்று எண்ணம் கொண்டு சிற்பி
அந்த இரண்டு கற்களை
எடுத்துக் கொண்டு இருப்பிடத்தை
நோக்கிப் பயணம் வைத்தனன்

கையில் உளியும் சுத்தி  யலும்
எடுத்துக் கல்லில் வைத்தனன்
பையப் பையத் தட்டித் தட்டிக் 
கல்லின் திறத்தை உணர்ந்தனன்

உளியால் தட்ட ஓரடி ஒரு
கல்லின் மீது விழுந்ததும்
வலியால் துடித்த அந்தக் கல்லோ
வளைந்து கொடுக்க மறுத்தது

இன்னொரு கல் தட்டத் தட்ட
இசைந்து பணிந்து விட்டது
சிற்பி  யுடைய கற்ப னையும்                                 
சிறகை விரித்துப் பறந்தது

பட்ட அடிகள் தாங்கிய கல்
பரமன் சிலையாய் ஆனது
பாரின் வேந்தன் போற்றிப் புகழக்
கோவிலில்  குடி கொண்டது

தொட்ட உடனே வளைந்து கொடுக்க
மறுத்த கல்லோ மிதியடி
பட்ட கல்லாய் கோவிலின்
நுழைவாசல் படியாய்க் கிடந்தது

Sunday, June 17, 2018

காகமும் நரியும்

காகமும் நரியும்

பசி மிகுந்த காகம் ஒன்று
பாட்டி கடைக்கு வந்தது
அன்புடனே பாட்டி தந்த
வடையைக் கவ்விச் சென்றது 

காக்கை வாயில் வடையினைக்
குள்ள நரியும் பார்த்தது
தட்டி வடையைப் பறித்திடத்
திட்டம் ஒன்று போட்டது

"பாட்டு ஒன்று பாடு" என்று
நரியும் அதனை கேட்டது
காக்கை வடையைக் காலில் பற்றிக்
'கா கா' 'கா கா' என்றது\

குயிலைப் போல இனிய குரலில்
பாட்டுப் பாடும் காக்கையே
மயிலைப் போல நடனம் ஆடு
என்று நரியும் கேட்டது

தந்திரமாய்த் தட்டி வடையைப்
பறிக்க நினைத்த நரியினைத்
தந்திரத்தால் வெல்லக் காக்கை          
யுக்தி ஒன்று செய்தது

வாயில் வடையைக் கவ்விக் கொண்டு
வட்டமிட்டுத் திரிந்தது
'தை தை' என்று ஆட்டம் ஆடிக்
கிளையில் ஜோராய் அமர்ந்தது
  
வஞ்சம் செய்த நரியின் முகமோ
கொஞ்சம் தொங்கிப் போனது
புத்திசாலிக் காகம் வடையைக்
கொத்திக் கொத்தித் தின்றது

Saturday, June 9, 2018

சிலந்தியும் சிறுவனும்

                  Photo by David Boozer from Pexels

சிறுவன்:

சின்னஞ் சிறிய சிலந்தியே
உன்னை எண்ணி வியக்கிறேன்!
எத்தனை அழகு உன் வலை!
எங்கே கற்றாய் இந்தக் கலை!

சிலந்திப்பூச்சி:

உள்ளத் தூய்மையோடு நீ
உவந்து கேள்வி கேட்கிறாய்
அருகில் வந்தால் ரகசியம்
காதில் சொல்வேன், நிச்சயம்

எந்தன் வயிற்றில் ஒரு திரவம்
என்றும் செய்வேன் உற்பத்தி
திரவம் இதனால் பின்னிடுவேன்
எழிலாய் வலைஎன் னைச்சுற்றி

திரவம் அதனை இழுப்பதினால்
இழைகள் அழகாய் உருவாகும்
இருக்கும் அவையும், நூலைப்போல்
இழுத்தால் இரும்புக்கு நிகராகும்

வலையில் சில நேர் கோடுகளே
வருவேன், போவேன், அதன் மேலே
வலையில் அதிர்வுகள் ஏற்பட்டால் 
வந்தது உணவு, என்றறிவேன்

சிக்கிய பூச்சியைச் சுற்றிடுவேன்
நூல்போல் செய்த இழையாலே
சுற்றிப் பின்னர் புசித்திடுவேன்
சுவையை மகிழ்ந்து ரசித்துடுவேன்

பட்டுப் புழுவின் கூட்டைப்போல்
கட்டிடுவேன் நான், ஒரு கூடு
முட்டைகள் இட்டுக் கூட்டுக்குள்
பத்திரமாய் நான் காத்திடுவேன்

முட்டைகள் பொரிந்து பூச்சிகளும்
முழுதாய் வெளியில் வந்திடுமாம்
நூலிழை பற்றிக் காற்றோடு
நூறு மைல்கள் சென்றிடுமாம்

பயிர்களை நாசம் செய்கின்ற
பூச்சிகள் பிடித்தே தின்றிடுவேன் - நோய்க்
கிருமிகள் பரப்பும் பூச்சிகளை
நொடியில் பிடித்துக் கொன்றிடுவேன்

சிறுவன்:

சிறுவன் எந்தன் கேள்விக்குச்
சிறப்பாய் பதிலைத் தந்தாயே!
சிலந்திப் பூச்சியே, உன்னை நான்
சிநேகிதன் ஆக்கிக் கொண்டேனே!

Sunday, May 27, 2018

பறவைகளின் பாட்டு



                                
பறவைகள் வானில் பறந்திடுமே
பாடல்கள் இனிதே பாடிடுமே
பாடும் ஒவ்வொரு பாட்டினிலும்
பற்பல பொருள்கள் இருந்திடுமே

பேடையைக் கொஞ்சிடப் பாடிடுமே
பிள்ளைகளுடனே பாடிடுமே  
உரிமையைக் காக்கப் பாடிடுமே
உணவினைக் கண்டால் பாடிடுமே

ஆபத்து வந்தால் பறந்தோடித்
தப்பிச் சென்றிட ஒரு பாட்டு
உறவுகளோடு கூடிடவே
அதற்கென பாடும் தனிப்பாட்டு

குஞ்சுகளுக்கு இரையூட்டக்
குஷியாய்ப் பாடும் ஒரு பாட்டு
கோபம் தாபம் கொண்டாலோ
கொதித்து எழுமே ஒரு பாட்டு

பறவைகள் பாடும் பாட்டினிலே
அடடா! எத்தனை பொருள் இருக்கு
வெறும் குரல் எழுப்புது என்றிருந்தேன்
விஷயங்கள் எதனை மறைந்திருக்கு?

Wednesday, May 23, 2018

எனக்குப் பிடித்த இனிப்பெது?

எத்தனையோ இனிப்புக்கள்
கடையில் விற்குது, ஆயினும்
என்றும் எனக்குப் பிடித்தது
இனிமை மிக்க ஜாங்கிரி

தங்கமான கைகளால்
எங்கள் தந்தை செய்தது
தங்கம் போல மினுக்குமே
திங்கத் திங்க ருசிக்குமே

ஊற வைத்து உளுந்தினை
உரலில் பதமாய் அரைக்கிறார்
அரைத்த உளுந்து மாவினை
ஜாங்கிரிக் குட்டையில் எடுக்கிறார்

வட்டம் இரண்டு சுற்றியே
வளையம் வளைய மாகவே
சுற்றிச் சுற்றிச் சங்கிலிபோல்
வடிவமைத்துக் கொள்கிறார்

அடுப்பில் எண்ணெய் காயுதே
அழகாய் ஜாங்கிரி குதிக்குதே
பதமாய் வெந்த ஜாங்கிரி
சர்க்கரைப் பாகில் மிதக்குதே

வட்ட மான தட்டிலே
வட்ட வடிவில் ஜாங்கிரி
எட்டி எட்டிப் பார்ப்பதேன்?
கிட்ட வந்தால் தருகிறேன்


Saturday, May 19, 2018

நவீன வண்டி





நவீன வண்டி, மெட்ரோ வண்டி
நகரத்தை முழுவதும் இணைக்கும் வண்டி
சப்தம் மிகவும் செய்திடாமலே
சாந்தமாகச் செல்லும் வண்டி

சிலசில பொழுது பாலத்தின் மேலே
சிலசில பொழுது சுரங்கத்தின் வழியே
கிடுகிடுஎன்று போகும் வண்டி
ஊருக்கு அழகைக் கூட்டும் வண்டி

புகையை வெளியே விடாத வண்டி
சுற்றுச் சூழலைக் காத்திடும் வண்டி
இங்கும் அங்கும் பார்த்து கொண்டே
சுகமாய்ச் செல்ல உதவும் வண்டி

எங்கள் ஊரின் மெட்ரோ வண்டி
எத்தனை பேரை கூட்டிப் போகுது
உங்கள் ஊரில் உண்டோ இதுபோல்                
சொகுசாய்ச் செல்லும் மெட்ரோ வண்டி?

Wednesday, May 16, 2018

வண்டுகளோட பாட்டுக் கச்சேரி




பூமியில் இருந்த தண்ணீர் எல்லாம்
வானத்தைத் தொட்டிட நினைத்ததே
சூரியக் கதிர்களில் பயணம் செய்தே
மழை தரும் மேகமாய் மாறியதே

"அம்மா அம்மா பூமிகக்குப் போகணும்"
என்றது மழை தரும் மேகங்கள்
அம்மா மேகமும் சின்ன மேகங்களும்
மழையைப் பொழிந்தது பூமியிலே

பூமி நனைந்தது புற்கள் முளைத்தது
பூக்கள் பூத்தது செடிகளிலே
வண்டுகளோட பாட்டுக் கச்சேரி
பலமாய் நடக்குது தோட்டத்திலே

Saturday, May 12, 2018

தொட்டால் சுருளும் ரயில் வண்டி


சுக்கு புக்கு சத்தம் போடாமலே
குப் குப்புகையை விடாமலே
தோட்டத்தில் ஓடுது ரயில் வண்டி - இது
தொட்டால் சுருளும் ரயில் வண்டி

சிகப்புக் கொடியைக் கண்டாலும்
திகைத்துப் பயந்து நிற்காது
பச்சைக் கொடியைப் பார்த்தாலும் - இது
பரபரப்புடனே ஓடாது

எத்தனை பெட்டிகள் இருந்தாலும்
எவரையும் ஏற்றிச் செல்லாது
காட்டிலும் மேட்டிலும் சென்றிடுமே  
கண்ணைக் கவரும் ரயில் வண்டி

தண்டவாளம் இல்லாமலே
தரையில் ஊர்ந்து செல்லுது பார்
மரவட்டை என்னும் ரயில் வண்டி - நம்
மனதைக் கவரும் ரயில் வண்டி 

சாய்ந்தாடும் குதிரை

தாத்தா தந்த குதிரைமேல்
தாவிக் குதித்து ஏறிடுவேன்
முரண்டுத் தானங்கள் செய்யாது
முன்னும் பின்னும் ஆடிடுவேன்

குதிரை மேலே ராஜாபோல்
கம்பீரமாக அமர்ந்திடுவேன்
டக்-டக்  டக்-டக் என்றே சுற்றிச்              
சவாரி எங்கும் செய்திடுவேன்



அழகுத் தங்கைப் பாப்பாவை
அன்புடன் ஏற்றிக் கொண்டே நான்
பாரில் உள்ள இடமெல்லாம்
பார்த்துக் களித்துத் திரும்பிடுவேன்

புல்லும் கொள்ளும் தின்னாது
என்னைப் பிரிந்து  செல்லாது
சன்னப்  பட்டின ஊரினிலே
சிறப்பாய்ச் செய்த குதிரை இது

Thursday, May 10, 2018

கடிகாரம்


கடிகாரம் நல்ல கடிகாரம்
கையில் கட்டும் கடிகாரம்
வான வில்லின் வண்ணங்களில்
வகை வகையான கடிகாரம்

எடுத்தே கையில் கட்டிடுவேன்
எங்கும் மிடுக்காய்ச் சுற்றிடுவேன்
எவரும் என்னிடம் மணிகேட்டல்
உடனே அன்புடன் சொல்லிடுவேன்

நேரத்தோடு வாழ்க்கையிலே
எல்லா வேலையும் செய்திடுவேன்
பொன்னைப் போன்ற நேரத்தைக்
கண்கள் போலப் போற்றிடுவேன்

ஒன்றன் பின்னே ஒன்றாக
ஓடிப் பிடிக்கும் முள்ளிரண்டு
ஓடிப் பிடித்து விட்டாலோ
அடடா! மணியோ பன்னிரெண்டு

தபக்கனார் தபக்கனார்


"தபக் தபக்" என்று தரையில்
தத்தித் தத்திச் செல்வதால்
தவளையரை எங்கள் பாப்பா
அழைக்கும் பெயர் "தபக்கனார்"

தபக்கனார் தபக்கனார்
தரையில் தத்திச் செல்லுவார்
தண்ணீரைப் பார்த்து விட்டால்
தாவி நீச்சல் போடுவார்

Saturday, May 5, 2018

பலாமரம் பலாமரம்


பலாமரம் பலாமரம்
பலகிளைகள் இருக்கும் மரம்
பச்சைவண்ண பலாப்பழம்
காய்த்துக் காய்த்துக் கொட்டும் மரம்

தேனைப்போலத் தித்திப்பான
சுளைகள்யாவும் பத்திரமாய்
பானைபோன்ற வயிற்றுக்குள்ளே
பாதுகாத்து வைக்கும் மரம்
                                                       
பக்குவமாய்ச் சமயல்செய்யப்
பலாக்காய்கள் கொடுக்கும் மரம்
விதவிதமாய் இசைக்கருவிகள்
விரும்பித் தச்சர் செய்யும் மரம்

Wednesday, May 2, 2018

காற்றே நீ


உருவம் உனதைக் காட்டாமல்
உயிராய் எமக்குள் ஒளிர்கின்றாய்
அருவம் ஆகி இருந்தும் நீ
அழகாய்க் காதில் ஒலிக்கின்றாய்

மொட்டுக்குள்ளே ஊடுருவி
மெல்லப் பூவாய் மலர்கின்றாய்
தொட்டுக் கடலின் அலைகளையே
தூக்கிக் கீழே விடுகின்றாய்

புல்லில் அசைவதும் நீயேதான்
புவியும் உயிர்ப்பது உன்னால்தான்
நீல வானில் பறவைகளும்
சிறகை விரிப்பதும் உன்னால்தான்

கண்ணன் வாயில் வேய்ங்குழலின்
நுண்ணிய துளைகள் வழியாலே
பண்ணிய பாடல்கள் காதினிலே
பாயுது பாயுது தேன்போலே

பொறுமை கொண்ட போதினிலே
பொதிகைத் தென்றல் போல்வருவாய்
பொங்கி எழுந்து விட்டாலோ
புயலாய் நீயும் மாறிடுவாய்

காற்றே உன்னை என்றேனும்
காண்பேனோ நான் கண்ணாலே?
கேட்பேன் கேள்விகள் பல நூறு
சொல்வாயோ பதில் தன்னாலே?

மொழி



கொஞ்சும் கிளி பறந்து வந்து
மா மரத்தில் அமர்ந்தது
'குக்கூ குக்கூ' என்று கூவிக்
கொஞ்ச நேரம் இருந்தது

சின்னக் குயில் கிளியின் அருகில்
கூடிப் பேச வந்தது
'கிக்கீ கிக்கீ' என்று பேசி
ஏதோ செய்தி சொன்னது

சின்னஞ் சிறிய சிட்டுக்குருவி
தென்னங் கீற்றில் அமர்ந்தது
'கா-கா கா-கா' என்று கரைந்து
களிப்பு  மிகவும் கொண்டது

கன்னங் கரிய காக்கை சின்னக் 
குருவி அருகில் வந்தது
'கீச்சு கீச்சு' என்று கத்தி
விரைந்து வானில் பறந்தது

சின்னக் குயில், சிட்டுக் குருவி
பச்சைக் கிளியும் காக்கையும்
சொந்த மொழியை மறந்ததா?
சற்றும் இல்லை இல்லையே

வேறு வேறு மொழியைத் தினமும்
விரும்பி விரும்பிப் படித்ததே
விரும்பிப் படித்த மொழியைப் பழகத்
திரும்பத் திரும்பச் சொன்னதே

Saturday, April 28, 2018

பட்டுப் பாவாடை


தையல்காரன் தைத்திடாத 
பட்டுப் பாவாடை - இது
கையால் வண்ணம் தீட்டிடாத
பட்டுப் பாவாடை 


பச்சை, நீலம், மஞ்சள் போன்ற
பலவித வர்ணத்தால் - இது 
இச்சை கொண்டு இயற்கை செய்த 
பட்டுப் பாவாடை 


கோடுகள் புள்ளிகள் என்றே கோலம் 
காட்டும் பாவாடை - இது 
கோடிப் பொன்னைக் கொடுத்தால் கூடக் 
கிடைக்காப் பாவாடை


பட்டு, மாலா, நீலா, லீலா 
பத்மா அனைவருமே 
தொட்டுத் தொட்டுப் பார்க்கத் துடிக்கும் 
பட்டுப் பாவாடை


பட்டாம்பூச்சி போட்டுக் கொண்ட 
பட்டுப் பாவாடை 
பாரில் இதுபோல் கிடைத்திடுமோ சொல் 
பட்டுப் பாவாடை

Friday, April 27, 2018

அ ஆ பாடம் கற்றிடலாம்



அறிவும் ஆற்றலும்               அ   ஆ  வாம்

இன்பமும் ஈகையும்              இ   ஈ   யாம் 

உண்மையும் ஊக்கமும்           உ   ஊ  வாம்

எளிமையும் ஏற்றமும்             எ   ஏ   யாம்

ஐக்கியமும் ஒழுக்கமும்               ஐ   ஒ  வாம்

ஓங்காரமும் ஒளவையும்          ஓ   ஒள  வாம்

அ  ஆ  பாடம் கற்றிடலாம் - நம்
ஆசான் அவரைப் போற்றிடலாம்

கண்கள்

சின்னஞ் சிறிய குருவிக்கு
கடுகு போன்ற கண்களாம்
வளலயில் பதுங்கும் நண்டுக்கு
குன்றிமணிக் கண்களாம்

குட்டிக் குட்டிப் பூனைக்கு
கோலி குண்டுக் கண்களாம் 
வெள்ளை வெள்ளை முயலுக்குப்
பளிங்கு போன்ற கண்களாம்

அறிவில் சிறந்த ஆந்தைக்கு
முட்டை போன்ற கண்களாம் 
ஆனால் அழகு மயிலுக்கோ
தோகை முழுதும் கண்களாம்






Tuesday, April 24, 2018

மின்னுது மினுக்குது நட்சத்திரம்



கார்த்திகைத் தீபங்கள் போல வானில்            
மின்னுது மினுக்குது நட்சத்திரம்                     
தங்கைப்  பாப்பா கண்களைப் போல
மின்னுது வானில் நட்சத்திரம்

மின்மினிப் பூச்சிகள் நிலாவைக் காண
வானம் சென்று வழி தவறி
இங்கும் அங்கும் அலைவது போல
இருளில் ஒளி விடும் நட்சத்திரம்

கூடை முல்லைப் பூக்களை எடுத்து
குளிரும் நிலவின் மேல் எவரோ
கொட்டி விட்டது போல வானில்
மின்னுது மினுக்குது நட்சத்திரம்

சிட்டுக்குருவி

                                                        Photo by Vladyslav Dukhin from Pexels



சின்னச் சின்னச் சிட்டுக்குருவி
சின்னப் பையன் கிட்ட வா
தட்டு நிறைய நெல்லைத் தருவேன்
தட்டிடாமல் கிட்ட வா

கடுகு போலக் கண்களாலே
பயந்து பயந்து பார்ப்பதேன்?
வானில் பறந்து செல்கிறாயே
தரையில் தத்திச் செல்வதேன்?

சின்னஞ் சிறிய அலகினாலே
நெல்லைக் கொறித்து அரிசியின்
மணியை மட்டும் பிரித்து எடுக்கப்
படித்ததெந்தப் பள்ளியில்?

சுறுசுறுப்பாய்ப் பறந்து திரியும்
சிட்டுக் குருவி உன்னைப்போல்
துறுதுறுப்பாய் நானும் வாழ்வேன்
உறுதி இது உறுதியே