Saturday, August 4, 2018

குறும்பு நிறையப் பண்ணுங்கள்



குட்டிக் குரங்கை அன்புடன்
கட்டிக் கொண்டு நெஞ்சிலே
கிளைக்குக் கிளை தாவிடும்  
குரங்கைப் பாரு மரத்திலே

வாலைக் கிளையில் சுற்றியே
தலை கீழாகத் தொங்கியே                    
காலை மாலை வேலையில்
தேகப் பயிற்சி செய்யுதே

இரண்டு கையை மூடியே 
ஒன்றில் இனிப்பை ஒளித்திடின்
இனிப்பு இருக்கும் கையையே
கண்டு பிடித்துச் சிரிக்குதே

குறும்பு மிகவும் செய்திடும்
குரங்கைப் பார்க்க வாருங்கள்
குழந்தைகளே நீங்களும்
குறும்பு நிறையப் பண்ணுங்கள்


Monday, July 30, 2018

வாழைப்பழம் வாழைப்பழம்


வாழைப்பழம் வாழைப்பழம்
குலைகுலையாய்த் தொங்கும் பழம்
இனிக்கும் நல்ல வாழைப்பழம்
எல்லோரும் வாங்கும் பழம்

விலையில் மிகவும் குறைந்த பழம்
வருடம் முழுதும் கிடைக்கும் பழம்               
பண்டிகையில், பூஜையிலே
பந்தியிலே முந்தும் பழம்

வாழைப்பழம் வாங்கிடலாம்
வாயில் போட்டு ருசித்திடலாம்
தோலை மட்டும் மறக்காமல்
தொட்டியிலே போட்டிடலாம் 

கை வீசம்மா


கை வீசம்மா கைவீசு
காலையில் எழுந்ததும் கைவீசு
நூலகம் போவோம் கைவீசு
புத்தகம் படிப்போம் கைவீசு

அறிவை வளர்ப்போம் கைவீசு
ஆற்றல் பெருகிடும் கைவீசு
பற்பல கற்பனை செய்தே நாம்
பாடல்கள் எழுதலாம் கைவீசு

Saturday, July 7, 2018

கங்காரு


கங்காரு ஆண்ட்டி காலை நேரம்
எங்கே போறீங்க?
கடைத் தெருவில் பொருட்கள் வாங்க
நானும் போறேங்க

கடையோ இருக்கு மிகவும் தொலைவில்
எப்படிப் போவீங்க?
தடையே இல்லை,  தாவித் தாவி
நொடியில் போவேங்க

வீட்டில் இன்று என்ன விசேஷம்
என்னிடம் சொல்லுங்க
செல்லப் பிள்ளை பிறந்த நாளாம்
சீக்கிரம் போகனுங்க

பையில்லாமல் பொருட்களை எப்படி
வாங்கி வருவீங்க? - என்
தொப்பைப் பையில் போட்டுக்கிட்டுத்          
துள்ளி வருவேங்க

Thursday, June 28, 2018

இரண்டு கற்களின் கதை


கற்கள் இரண்டு மலையின் அடியில்
எடுப்பார் இன்றிக் கிடந்தது
சிற்பக் கலையில் கற்றுத் தேர்ந்த
சிற்பி கண்ணில் பட்டது

கற்கள் இவற்றில் கடவுள் சிலைகள்
தட்டித் தட்டிச் செய்யுவேன்.
மன்னரிடம் சென்று நானும்
பொன்னும் பொருளும் வெல்லுவேன்

என்று எண்ணம் கொண்டு சிற்பி
அந்த இரண்டு கற்களை
எடுத்துக் கொண்டு இருப்பிடத்தை
நோக்கிப் பயணம் வைத்தனன்

கையில் உளியும் சுத்தி  யலும்
எடுத்துக் கல்லில் வைத்தனன்
பையப் பையத் தட்டித் தட்டிக் 
கல்லின் திறத்தை உணர்ந்தனன்

உளியால் தட்ட ஓரடி ஒரு
கல்லின் மீது விழுந்ததும்
வலியால் துடித்த அந்தக் கல்லோ
வளைந்து கொடுக்க மறுத்தது

இன்னொரு கல் தட்டத் தட்ட
இசைந்து பணிந்து விட்டது
சிற்பி  யுடைய கற்ப னையும்                                 
சிறகை விரித்துப் பறந்தது

பட்ட அடிகள் தாங்கிய கல்
பரமன் சிலையாய் ஆனது
பாரின் வேந்தன் போற்றிப் புகழக்
கோவிலில்  குடி கொண்டது

தொட்ட உடனே வளைந்து கொடுக்க
மறுத்த கல்லோ மிதியடி
பட்ட கல்லாய் கோவிலின்
நுழைவாசல் படியாய்க் கிடந்தது

Sunday, June 17, 2018

காகமும் நரியும்

காகமும் நரியும்

பசி மிகுந்த காகம் ஒன்று
பாட்டி கடைக்கு வந்தது
அன்புடனே பாட்டி தந்த
வடையைக் கவ்விச் சென்றது 

காக்கை வாயில் வடையினைக்
குள்ள நரியும் பார்த்தது
தட்டி வடையைப் பறித்திடத்
திட்டம் ஒன்று போட்டது

"பாட்டு ஒன்று பாடு" என்று
நரியும் அதனை கேட்டது
காக்கை வடையைக் காலில் பற்றிக்
'கா கா' 'கா கா' என்றது\

குயிலைப் போல இனிய குரலில்
பாட்டுப் பாடும் காக்கையே
மயிலைப் போல நடனம் ஆடு
என்று நரியும் கேட்டது

தந்திரமாய்த் தட்டி வடையைப்
பறிக்க நினைத்த நரியினைத்
தந்திரத்தால் வெல்லக் காக்கை          
யுக்தி ஒன்று செய்தது

வாயில் வடையைக் கவ்விக் கொண்டு
வட்டமிட்டுத் திரிந்தது
'தை தை' என்று ஆட்டம் ஆடிக்
கிளையில் ஜோராய் அமர்ந்தது
  
வஞ்சம் செய்த நரியின் முகமோ
கொஞ்சம் தொங்கிப் போனது
புத்திசாலிக் காகம் வடையைக்
கொத்திக் கொத்தித் தின்றது

Saturday, June 9, 2018

சிலந்தியும் சிறுவனும்

                  Photo by David Boozer from Pexels

சிறுவன்:

சின்னஞ் சிறிய சிலந்தியே
உன்னை எண்ணி வியக்கிறேன்!
எத்தனை அழகு உன் வலை!
எங்கே கற்றாய் இந்தக் கலை!

சிலந்திப்பூச்சி:

உள்ளத் தூய்மையோடு நீ
உவந்து கேள்வி கேட்கிறாய்
அருகில் வந்தால் ரகசியம்
காதில் சொல்வேன், நிச்சயம்

எந்தன் வயிற்றில் ஒரு திரவம்
என்றும் செய்வேன் உற்பத்தி
திரவம் இதனால் பின்னிடுவேன்
எழிலாய் வலைஎன் னைச்சுற்றி

திரவம் அதனை இழுப்பதினால்
இழைகள் அழகாய் உருவாகும்
இருக்கும் அவையும், நூலைப்போல்
இழுத்தால் இரும்புக்கு நிகராகும்

வலையில் சில நேர் கோடுகளே
வருவேன், போவேன், அதன் மேலே
வலையில் அதிர்வுகள் ஏற்பட்டால் 
வந்தது உணவு, என்றறிவேன்

சிக்கிய பூச்சியைச் சுற்றிடுவேன்
நூல்போல் செய்த இழையாலே
சுற்றிப் பின்னர் புசித்திடுவேன்
சுவையை மகிழ்ந்து ரசித்துடுவேன்

பட்டுப் புழுவின் கூட்டைப்போல்
கட்டிடுவேன் நான், ஒரு கூடு
முட்டைகள் இட்டுக் கூட்டுக்குள்
பத்திரமாய் நான் காத்திடுவேன்

முட்டைகள் பொரிந்து பூச்சிகளும்
முழுதாய் வெளியில் வந்திடுமாம்
நூலிழை பற்றிக் காற்றோடு
நூறு மைல்கள் சென்றிடுமாம்

பயிர்களை நாசம் செய்கின்ற
பூச்சிகள் பிடித்தே தின்றிடுவேன் - நோய்க்
கிருமிகள் பரப்பும் பூச்சிகளை
நொடியில் பிடித்துக் கொன்றிடுவேன்

சிறுவன்:

சிறுவன் எந்தன் கேள்விக்குச்
சிறப்பாய் பதிலைத் தந்தாயே!
சிலந்திப் பூச்சியே, உன்னை நான்
சிநேகிதன் ஆக்கிக் கொண்டேனே!